கோவில்பாளையம்; கோவில்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலையில், விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு, உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளன. எனினும், கோவில்பாளையம் பேரூராட்சியில், குரும்பபாளையம் துவங்கி குன்னத்தூர் வரை, கோவை – சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அனுமதியற்ற விளம்பர பலகைகள் நிறுவப்பட்டிருந்தன.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, நேற்று குரும்பபாளையம், கோவில் பாளையம் பாலம் அருகிலும், பஸ் ஸ்டாண்ட் அருகிலும், 4 கி.மீ., தொலைவில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
அதிகாரிகள் கூறுகையில், ‘அனுமதி இல்லாத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு அதற்கான கட்டணமும் அவர்களிடம் வசூலிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். அனைத்து துறைகளிலும் உரிய அனுமதி பெற்ற பிறகு விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும்’ என்றனர்.