ரஜினிகாந்த், ‘பேட்ட’ படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, குரு சோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூன் பகுதிகளில் நடந்தது. இப்போது லக்னோவில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
‘பேட்ட’ படத்தின் காட்சிகளை சிலர் திருட்டுத்தனமாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளையும் அவரது தோற்றங்களையும் செல்போனில் படம்பிடித்து வெளியிட்டனர். அதன்பிறகு விஜய் சேதுபதி துப்பாக்கியுடன் ஆவேசமாக செல்லும் வீடியோ ஒன்று வெளியானது.
இப்போது ரஜினிகாந்த் வில்லன்களை அடித்து துவைக்கும் சண்டை காட்சியும் வீடியோவாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். எதிர் வீட்டு மாடியில் நின்று யாரோ இந்த காட்சியை படம்பிடித்து வெளியிட்டு உள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘பேட்ட’ வீடியோ காட்சியை பரப்ப வேண்டாம் என்று படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதையும் கசிந்து விட்டது என்றனர். பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகமாக தயாராவதாகவும் கூறப்பட்டது. ரஜினிகாந்த் தாதாவாகவும் கிராமத்தில் வேட்டி–சட்டையில் வசிக்கும் எளிய மனிதராகவும் இரு தோற்றங்களில் நடிப்பதாக பேசப்படுகிறது.
பேட்ட படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். அடையாள அட்டையுடன் வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள்.