மேட்டுப்பாளையம் : பெள்ளாதி ஊராட்சியில், ஒரு கோடியே, 20 லட்சம் ரூபாய்க்கு வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜைகளும், 37 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக்கூடம் திறப்பு விழாவும் நடைபெற்றது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் பெள்ளாதி ஊராட்சியில்,1,2,3,4 மற்றும் 9 ஆகிய ஐந்து வார்டுகளில் உள்ள, கணேஷ் நகர், சேரன் நகர், சின்ன தொட்டிபாளையம், ஆதித்யா நகர் உள்பட பத்து குடியிருப்பு பகுதிகளில், ஒரு கோடியே, 2 லட்சம் ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் கட்டப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து மொங்கம்பாளையம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில், 12 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜைகள் சின்னதொட்டிபாளையத்தில் நடந்தது. சின்னத்தொட்டிபாளையம் ஏ.டி., காலனியில், 37 லட்சம் ரூபாய் செலவில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கும், பூமி பூஜைக்கும் பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அமுதா ராமசாமி வரவேற்றார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து, பணிகளை துவக்கி வைத்தார். இந்த விழாவில் காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை, ஒன்றிய கவுன்சிலர்கள் சாமிநாதன், ரத்தினம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். வார்டு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.