கோவை, பிப். 21: கோவை மதுக்கரை மார்க்கெட் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர், கோவைப்புதூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெயிண்ட் தயாரிப்பு டீலரிடம், வீட்டில் பெயிண்ட் அடிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஒப்பந்தம் செய்தார். ஆனால், ஒப்பந்தப்படி பெயிண்ட் அடிக்கவில்லை எனவும், வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என சம்பத்குமார் கேட்டபோது, பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் டீலர் ஆகியோர் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, சம்பத்குமார், பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் டீலர் மீது கோவை நுகர்வோர் கோட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் டீலர் என இரு நிறுவனங்களும் சேர்ந்து ரூ.11,700 பணம் திருப்பி கொடுக்கவேண்டும், மனஉளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம், கோர்ட் செலவாக ரூ.5 ஆயிரம் ஆகியவையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.