பெண் விவசாயியை தாக்கி பணம் பறிப்பு : கோவையில் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

0
11

கோவை: கோவை மாவட்டம் நவக்கரை மாவுத்தம்பதி தோட்டத்தில் இருந்த பெண் விவசாயி காளீஸ்வரியை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் நான்கு பேர், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை மாவட்டம் நவக்கரை மாவுத்தம்பதி கிராமத்தில் உள்ள பழைய ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 51. இவர் விவசாயி. இவர் நேற்று கொழிஞ்சாம்பாறை சென்ற நிலையில் தோட்டத்து வீட்டில் மனைவி காளீஸ்வரி மட்டும் இருந்தார்.

நள்ளிரவு நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்த நான்கு பேர் கும்பல் உள்ளே புகுந்தது. பணம் நகை கொடுக்குமாறு மிரட்டினர். அவர் மறுத்த நிலையில் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு, வீட்டுக்குள் நகை பணத்தை தேடினர். பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் அவர்களிடம் சிக்கிவிட்டது.

இதற்கிடையே, வெளியே தள்ளிவிடப்பட்ட காளீஸ்வரி உடனடியாக தனது மகனுக்கு மொபைல் போன் வழியாக தகவல் கொடுத்துள்ளார். அவர் போனில் பேசுவதைக் கண்ட கொள்ளையர்கள், நைலான் கயிற்றில் அவரது கழுத்தை இறுக்கிக் கொல்ல முயற்சித்தனர்.

அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து தோட்டங்களில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர்.

இதனை கண்ட கும்பல், தப்பி ஓடியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.