பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; நூலக அதிகாரி கைது

0
92

கோவையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

நூலக ஊழியர்

கோவை உக்கடம் கரும்பு கடையை சேர்ந்தவர் சுல்தான் மியாமணியம் (வயது 47). இவர் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நூலகங்களிலும் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் காரமடை பகுதியில் உள்ள நூலகத்திற்கு புத்தக இருப்புகளை சரிசெய்ய அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது அங்கு பணிபுரியும் பெண் ஊழியரிடம் 2 அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை

இந்த நிலையில் சம்பவத்தன்று பணியில் இருந்த பெண் ஊழியரிடம், அங்கு வந்த சுல்தான்மியாமணியம் பாலியல் தொல்லை கொடுத்து, தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து பெண் ஊழியர் சத்தம்போடவே, அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து மதிய உணவு சாப்பிட பெண் ஊழியர் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சுல்தான்மியாமணியம், பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அவர் சத்தம் போட்டதால் ஆத்திரடைந்த சுல்தான்மியாமணியம் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

அதிகாரி கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காரமடை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சுல்தான்மியாமணியம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், மானபங்கம் செய்ய முயன்றுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.