பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பெட் பாட்டில்களும் வெட்டுத்துணிகளும்! அன்றாடம் 13 லட்சம் டன் நுால் தயாரிக்கும் ஓ.இ., மில்கள்

0
10

கோவை; வீணாகும் துணிகள், காலி பாட்டில் கழிவுகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் 13 லட்சம் டன் பொருட்கள், வீட்டு உபயோக ஜவுளி பொருட்களாக மாற்றப்படுகின்றன. இது சார்ந்த தொழிற்சாலைகள், தமிழ்நாட்டில் மட்டுமே அதிகம் உள்ளன.

கோவை மில்களில் பருத்தியிலிருந்து நுால் தயாரிக்கும்போது, பஞ்சுகளில் கழிவுகள் ஏற்படுகின்றன. திருப்பூர் பனியன் தொழில் நிறுவனங்களில் தயாராகும் ஆடைகளில், ஒவ்வொரு கிலோவுக்கும் சராசரியாக 4 சதவீதம் வரை வெட்டி வீணாக்கப்படுகின்றன. நாம் உடுத்தி பழையதாகும் துணிகளும் வீணாக்கப்படுகின்றன.

இந்த 3 கழிவுகளுமே, வண்ணங்களுக்கு ஏற்ப பிரித்து அரைக்கப்பட்டு மீண்டும் பஞ்சாகவும், நுாலாகவும் மாற்றப்படுகின்றன. நுால் மீண்டும் நெசவு செய்யப்பட்டு, காலடி மிதியாகவும், திரைச்சீலைகளாகவும், பெட்ஷீட், மேட்-அப் வீட்டு உபயோகத்துக்கான பொருட்களாகவும் துளி தண்ணீர் கூட, பயன்படுத்தப்படாமல் மாற்றப்படுகின்றன.இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இவற்றை தயார் செய்வது, ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள்.

இது குறித்து, மறு சுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறியதாவது:

கழிவு பஞ்சுகளிலிருந்து தான், 2 முதல் 30 கவுன்ட் வரையிலான நுால்களை, ஓபன் எண்ட் (ஓ.இ) ஸ்பின்னிங் மில்களில், தயார் செய்து கொண்டிருந்தோம்.

தற்போது பெட் பாட்டில்களிலிருந்து நுால் தயாரித்து, அவற்றையும் கலந்து 40 கவுன்ட் வரை நுால் தயாரிக்கிறோம். இவற்றை பெண்களுக்கான லெக்கிங்ஸ், போர்வைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், தரை துடைப்பான்கள் போன்ற பொருட்களாக மாற்றி வருகிறோம்.

ஆயத்த ஆடை நிறுவனங்களில் கிடைக்கும், பனியன் வெட்டு கழிவுகளை வண்ணங்கள் வாரியாக பிரிக்கிறோம். இவற்றை அரைத்து வண்ணப்பஞ்சாக மாற்றுகிறோம். இவற்றை, ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், நுாலாக மாற்றி துணியாக நெசவு செய்கின்றன.

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு, 13.25 லட்சம் கிலோ நுால்களை, மறு சுழற்சியால் தயாரிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு எவ்வித மாசும் தராத தொழிலாக இது நடக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் உட்பட 2 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்பை வழங்கும் இந்த தொழிற்சாலைகளுக்கு, அரசு ஊக்கத்தொகை வழங்கி உதவ வேண்டும்.

இவ்வாறு, ஜெயபால் தெரிவித்தார்.