அசாதாரண நிலை
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட 7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் கோவை மாவட்டத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக கூடுதல் டி.ஜி.பி. தாமரைகண்ணன் கோவை வந்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் கோவை மாநகரம் முழுவதும் அதிரடிப்படை, கமாண்டோ படையினர் உள்பட 3 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலோசனை
இதற்கிடையில் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. தாமரைகண்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 500 போலீசார் போதுமானது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 12 பேர் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சம்பவங்களில் துப்பு கிடைத்துள்ளது. உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படுவார்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அமைதி திரும்பியது
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 நாட்களாக எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. கோவையில் அமைதி திரும்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.