பெட்ரோல் குண்டு விவகாரம்; உதவிய நான்கு நண்பர்கள் கைது

0
94

கோவை; கோவையில் பா.ஜ., பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபருக்கு உதவிய அவரது நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, செல்வபுரம் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் இரண்டு பெட்ரோல் குண்டுகளுடன் வந்த நபரை பிடித்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த நாசர், 34 என்பது தெரியவந்தது. மேலும், பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தெற்கு கோட்ட பொறுப்பாளர் மணிகண்டன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசுவதற்காக கொண்டு சென்றதும், சில நாட்களுக்கு முன் நாசர் மணிகண்டனிடம் ரூ.5,000 கடன் கேட்டுள்ளார். மணிகண்டன் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, நாசர், தனது நண்பர்களான கரும்புக்கடையை சேர்ந்த பைசல் ரகுமான், 30 ஜாகிர் உசைன்,35, இதயதுல்லா, 36முகமது ஹர்சத் ஆகியோரிடம் மணிகண்டன் தனக்கு பணம் கொடுக்காமல் அசிங்கப்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனுக்கு பாடம் கற்பிக்க திட்டமிட்டு, பெட்ரோல் குண்டு வீச கூறினர். மேலும், நாசரிடம் ரூ.200 கொடுத்து பெட்ரோல் வாங்க கூறினர். பணத்தை பெற்றுக்கொண்டு பெட்ரோல் குண்டு தயார் செய்து தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள மணிகண்டனின் அலுவலத்தில் வீச எடுத்துச் சென்றார். அப்போது தான் போலீசில் சிக்கிக்கொண்டார் என்பது தெரியவந்தது.

நாசரை கைது செய்ததை தொடர்ந்து, பைசல் ரகுமான், ஜாகிர் உசைன், இதயதுல்லா, முகமது ஹர்சத் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.