பூமியின் உயிர் நாடி காற்று தரம் பராமரிப்பதில் சவால் 2 நாள் சர்வதேச மாநாடு

0
5

கோவை,: குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி சிவில் இன்ஜினியரிங் துறை மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ‘காற்றின் தரக் கண்காணிப்பு’ மையமாக கொண்டு இரண்டு நாட்கள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

இத்தாலி நாட்டின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் வேதியியல் தொழில்நுட்ப (சி.என்.ஆர்., – எஸ்.சி.ஐ.டி.இ.சி.,) ஆராய்ச்சியாளர் பட்ரிசியோ அரிகோ தலைமை வகித்து, கருத்தரங்கை துவக்கிவைத்தார்.

உலக அளவில் காற்றின் தரத்தை உயர்ந்த நிலையில் பராமரிப்பதில் உள்ள சவால்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், பொறியியல் துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

இதில், குமரகுரு கல்விக் குழுமத்தின் தலைவர் சங்கர் வாணவராயர் கூறியதாவது:

காற்று மாசு என்பது உலகம் முழுவதும் நிலவக்கூடிய முக்கிய பிரச்னையாக உள்ளது. இதை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளவேண்டும்.

டென்மார்க், சுவீடன், நார்வே உள்ளிட்ட நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்துவதிலும், தரத்தை மேம்படுத்துவதிலும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியாவில், உள்ள ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்தரங்கில், பல்வேறு நாடுகளில் இருந்து 100 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் தமிழக பிரிவு தலைவர் கார்த்திகேயன், கல்லுாரி முதல்வர் எழிலரசி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காந்திமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.