உன் கண்களிரண்டிலும்
கொள்ளிக் கட்டைகளைச் செருகுவது
நீ பார்க்கும் நீலப்படத்தில் எரியும் முலைதான்
மோதிக்கொண்டு அலறும் உன் வாயில்
பேட்டரிகளைத் திணிக்கிறது இரவு
நீ கடித்துத் தின்னும் கோழிக்காலில்
ஊறுவது உன் புண்ணிலெழும்
புழுக்களைத் தவிர வேறேதுமில்லை
நன்கு முகர்ந்து பார்
வோட்காவில்
உன் குழந்தையின் சிறுநீர் மணக்கிறது
தொட்டுக் கொள்ளும் கறித் துண்டுகளில்
கள்ளத் தொடர்பில் வெட்டுண்டவர்களின்
சதை வறுத்து வைக்கப்பட்டிருக்கிறது
காச நோயில் இறந்தவனின்
சுவாசக் குழல்களிலிருந்து
எடுக்கப்பட்ட புகையிலைகளால்
சமைக்கப்படுகிறது உன் சிகரெட்டுகள்
எரித்த எலும்புகளின் சுண்ணாம்பிலிருந்து
இரவுப்பால் காய்ச்சப்படுகிறது
கொதிக்கும் நெற்றிக்கு ஒத்தடமிட
வைத்துக் கட்டும் உப்பில் பெருகியிருக்கிறது
வல்லுறவில் கொல்லப்பட்ட
சிறுமியின் கண்ணீர்.
நீ மிதக்கும்
பூட்டிய அறையில்
எல்லாமும் கற்பனைதான்
கதவைத் தட்டும் விரல்
யாருடையதென்று பயப்படாதே
உன்னைப் பார்க்கக் காத்துக் கிடப்பவர்கள்
நீ உள்ளே தூங்குவதாக மட்டுமே
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
– இரா.கவியரசு