பூக்கள், கரும்புகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

0
89

இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள், கரும்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு ஜோடி கரும்பு ரூ.100

ஆயுத பூஜை பண்டிகை இன்று (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் மாவிலை தோரணம் கட்டி வழிபடுவார்கள். மேலும் வாழைக்கன்று, கரும்பு வைத்தும் பூஜை செய்வார்கள். இதனால் சத்திரம் வீதி, காந்தி மார்க்கெட், தேர்நிலை திடல் மார்க்கெட் பகுதிகளில் கரும்பு, வாழைக்கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அங்கு குவிந்த பொதுமக்கள் அவற்றை வாங்கி சென்றனர்.

இதன் காரணமாக சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில்லறை விலைக்கு ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30-க்கு விற்பனை ஆனது.

பூக்கள் அதிக விற்பனை

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விற்பனை குறைந்து இருந்த நிலையில், இந்த ஆண்டு கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மேலும் ஆயுதபூஜையையொட்டி காய்கறிகள், பூக்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்கமாக மார்க்கெட்டுக்கு 2 டன் பூக்கள் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆயுத பூஜையையொட்டி 7 டன் வரை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் கடந்த ஆண்டை விட பூக்களை அதிகமாக வாங்கி சென்றனர்.

மல்லி ரூ.1,000

அதில் செண்டு மல்லி மட்டும் வரத்து குறைவு காரணமாக விலை குறைந்து இருந்தது. மற்ற பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை ரூ.800 முதல் ரூ.1000 வரையும், செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.400 வரையும், அரளி ரூ.450 முதல் ரூ.500 வரையும், பட்டுப்பூ ரூ.80 முதல் ரூ.90 வரையும், சம்பங்கி ரூ.250 முதல் ரூ.300 வரையும், முல்லை ரூ.600 முதல் ரூ.700 வரையும், ஜாதிப்பூ ரூ.400-க்கும், சில்லி ரோஸ் ரூ.300-க்கும், துளசி ரூ.100-க்கும் விற்பனை ஆனது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.