புலியகுளம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் பிடிக்கவிடாமல் தடுப்பதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் – 60 பேர் கைது

0
102

கோவை மாநகராட்சி 70-வது வார்டு புலியகுளம் விநாயகர் கோவில் அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டியில் பொதுமக்கள் அவ்வப்போது குடிநீர் பிடித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக குடிநீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க ஊழியர்கள் அனுமதி மறுத்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் குடிநீர் பிடிக்க அனுமதி மறுப்பதை கண்டித்தும், அங்கு தனியாக குழாய் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தியும் 70-வது வார்டு தி.மு.க. செயலாளர் சந்திரன், பகுதி செயலாளர் சேதுராமன் தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி என்ஜினீயர் ஜோதி விநாயகம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர், உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று தண்ணீர் பிடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று கூறினார்.
ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் 60 பேரை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமை யிலான போலீசார் கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட் டனர்.
இந்தபிரச்சினை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சூயஸ் நிறுவனத்திடம் கொடுத்து உள்ளதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. இரவு நேரங்களில் குடிநீர் தொட்டி வளாகத்துக்குள் புகுந்து மதுகுடித்துவிட்டு சிலர் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
பாதுகாப்பை கருதி தற்போது சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இரவு நேரங்க ளில் பூட்டப்படுகிறது. அந்த பகுதி மக்களுக்கு உரிய முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.