புற்றுநோய் பரிசோதனை 23 லட்சம் பேருக்கு இலக்கு! கோவையில் நாளை துவங்குகிறது சிறப்பு திட்டம்

0
1

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மாநில அளவில், 12 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புற்றுநோய் பரிசோதனை திட்டம் நாளை (9ம் தேதி) துவக்கி வைக்கப்படுகிறது.

வாய் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்நோய்களை கண்டறிய, ஒருங்கிணைந்த பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், கோவை, திருப்பூர், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, மதுரை, திருச்சி, கரூர் ஆகிய, 12 மாவட்டங்களில் இத்திட்டம் நாளை (9ம் தேதி) செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம், ‘ஆன்லைன்’ வழியாக, கோவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடந்தது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சுமதி கூறுகையில், ”பல புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்த முடியும். கிராமப்புறங்களில் பெண்கள் பலர் தயக்கம் காரணமாக பரிசோதனைக்கு செல்வதில்லை.

அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, சுகாதாரத்துறை அலுவலகங்கள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது,” என்றார்.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறியதாவது:

கர்ப்பப்பை வாய், வாய், மார்பக புற்றுநோய்க்கு பரிசோதனை எளிமையாக்கப்பட்டுள்ளது. கோவையில் 160 கிராமப்புற நல மையங்கள், 89 ஆரம்ப சுகாதார நிலையம், 49 கிராமப்புற மையங்கள் என, 320 மையங்களில், 12ம் தேதி முதல் ஒருங்கிணைந்த பரிசோதனை செய்துகொள்ள முடியும்.

இதில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் வாய் புற்றுநோய் பரிசோதனையும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. முதல்கட்ட பரிசோதனையில் அறிகுறி தெரிந்தால், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.

கோவையில் சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு வர வழிப்புணர்வு ஏற்படுத்தி நோட்டீஸ் வழங்க உள்ளனர். 504 சுகாதார தன்னார்வலர்கள் கோவையில் உள்ளனர். அடுத்த, ஆறு முதல் ஒரு ஆண்டு வரை இப்பரிசோதனை திட்டம் செயல்பாட்டில் இருக்கும். கோவையில், 23 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.