புதிய சிறை வளாக கட்டுமானம்; சிறைத்துறை டி.ஜி.பி., ஆய்வு

0
18

பெ.நா.பாளையம்; கோவையில் புதிய சிறை வளாகம் கட்டுமான இடத்தில், தமிழக சிறைத் துறை டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ், ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் நகரின் மையப்பகுதியான காந்திபுரம் அருகே தற்போதைய மத்திய சிறை வளாகம் உள்ளது. 165 ஏக்கர் பரப்பில் உள்ள இச்சிறை வளாகத்தில், 100 பெண் கைதிகள் உட்பட 2,300 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, சிறை வளாகத்தில் தொழிற்சாலைகள், தளவாட சாமான்கள் வைக்கும் அறை, தோட்டம், மருத்துவமனை, சிறை காவலர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன.

கோவை நகரின் மத்தியில் நெருக்கடியாக உள்ள சிறை வளாகத்தை புறநகர் பகுதியில் அமைக்க, 2010ம் ஆண்டு தி.மு.க., அரசு திட்டமிட்டது. அதற்குப் பின்னர் வந்த அ.தி.மு.க., அரசு இதை கண்டுகொள்ளவில்லை. 2021ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

இதற்காக கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பூதான் போர்டுக்கு சொந்தமான, 95 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, அதில் புதிய சிறை வளாகத்தை கட்ட முடிவு செய்தது.

நேற்று சிறைத் துறை டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ், புதிய சிறை கட்டுமான இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். புதிய சிறை வளாகம் அமைய உள்ள பகுதி, அதன் பரப்பு, அருகே உள்ள அணுகு சாலைகள், அது தொடர்பான வரைபடம் ஆகியவை ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரத்தில் சிறை துறையினருக்காக கட்டப்படும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, சிறைத் துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம், எஸ்.பி., செந்தில்குமார், கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன், கோவை வடக்கு தாசில்தார் மணிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.