புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும்

0
153

ஊராட்சியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலகம்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், கக்கடவு ஊராட்சியில் 400 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதி மக்கள் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற வசதியாக 2004-2005-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஊராட்சி மன்றம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது.

இடிந்து சேதம்

இந்த அலுவலகம் கட்டி 18 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த அலுவலக கட்டிட சுவரில் விரிசல் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மழைநீர் மற்றும் வெயில் உள்ளே விழுந்தது. மேலும் தரைத்தளம் முழுவதும் சேதம் அடைந்தது.

இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், தளவாட பொருட்கள், பதிவேடுகள் அனைத்தும் அழியும் அபாயம் ஏற்பட்டது. கதவு, ஜன்னல்கள் துருப்பிடித்தன. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

புதிய கட்டிடம் வேண்டும்

அலுவலக கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத் திற்கு மாற்றப்பட்டது. அங்கு போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் அங்கு வந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பணிகள் பாதிக்கப்படுகிறது.

எனவே சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிட தர வேண்டும். அப்போது தான் சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு மக்கள் சென்று வருவதற்கு வசதியாக இருக்கும். இதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறையினர் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.