‘பீட் ஆபீசர்’ திட்டத்துக்கு வரவேற்பு! : குறைகிறது அடிதடி , திருட்டு

0
52

கோவை: மாநகர போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ‘பீட் ஆபீசர்’ திட்டத்தால் அடிதடி, இரவு நேர குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.

மாநகர பகுதிகளில் ரவுடித்தனம், கஞ்சா விற்பனை, சட்ட விரோத மது விற்பனை, போக்குவரத்து பிரச்னை, அடிதடி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில், ‘பீட் ஆபீசர்’ திட்டத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார். 312 போலீசார், சுழற்சி முறையில் 24 மணி நேரமும், மாநகர் முழுவதும் ரோந்தில் ஈடுபடும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் படி, ஒவ்வொரு பகுதியிலும், இரண்டு போலீசார் பைக்கில் ரோந்து செல்கின்றனர்.

குறிப்பாக, பிரச்னைகள் ஏற்படும் இடங்கள், இரவு நேரங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள், மக்கள் கூடும் இடங்களில், ‘பீட் ஆபீசர்’கள் உள்ளனர்.

இரவு நேரங்களில், குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்க சாத்தியக்கூறு உள்ள, ‘ஹாட் ஸ்பாட்களில்’ வாகன தணிக்கை மேற்கொள்கின்றனர்.

கடந்த வாரம் செல்வபுரம் பகுதியில், பா.ஜ., பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, குண்டுகளுடன் சென்ற நபரை, பீட் ஆபீசர்ஸ் துரத்தி பிடித்தனர்.

கோவைப்புதுார் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற வாலிபருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே சரிந்தபோது, அவ்வழியாக ரோந்து சென்ற பீட் ஆபீசர்ஸ் பார்த்து, இளைஞரை டாக்ஸியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ”எந்நேரமும் மக்கள் பார்வையில் போலீசார் தெரிவதுதான், ‘விசிபிள் போலீசிங்’. குற்றம் நடக்கும் இடங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், காலி மைதானம் போன்ற இடங்களில், போலீசார் அடிக்கடி ரோந்து செல்வதால், அடிதடி போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன. இதன் அடுத்த கட்டமாக பொது மக்கள், முதியவர்களுக்கு உதவும் வகையில், ‘பீட் ஆபீசர்களுக்கு’ பணி வழங்கப்படும்,” என்றார்.