பீகார் மாநில தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதனால் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளிகள் பலர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் கோவை மாவட்டத்தில் பவுண்டரி, ஜவுளி, கட்டுமான தொழில்கள் உள்ளிட்ட தொழில்கள் முடங்கும் அபாயம் உள்ளது.
இந்தநிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை 26 தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்த கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜே.ஜேம்ஸ், ஏ.சிவசண்முககுமார், எஸ்.சுருளிவேல் மற்றும் பலர் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பீகார் மாநில எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் பேசி உள்ள னர்.
இதன் காரணமாக இங்குள்ள தொழில்நிறுவனங்களை விட்டு பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.
தடுக்க முடியும்
அதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் தொழி லாளர்கள் கேட்கும் நிலையில் இல்லாத சூழல் உள்ளது. எனவே தமிழக அரசு பீகார் மாநில அரசுடன் பேசி, பீகார் அரசு அந்த மாநிலத்தில் பெரிதான அறிவிப்பு செய்ய வேண்டும்.
தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்தி மொழியில் பேசி பதிவுகள் செய்து, காவல்துறை, அரசு துறை மற்றும் ஊடகங்கள் மூலமாக உடனடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இதன் மூலம் பீகார் தொழிலாளர்கள் வெளியேறுவது தடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
குழு வருகை
இதைத்தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி, தொழில் அமைப்பு நிர்வாகிகளிடம் கூறும்போது பீகார் தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம் பிக்கையூட்டவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பீகார் சட்டமன்ற குழுவினரை கோவை மாவட்டத்துக்கும் அழைத்து வந்து அனைத்து பகுதிகளையும் பார்வையிட செய்து எந்த பாதிப்பும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்படும் என்றார்.
இது குறித்து தொழில் அமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பீகார் தொழிலா ளர்கள். கடந்த சில நாட்களில் 10 சதவீத பீகார் தொழிலாளர்கள் வெளியேறி உள்ளனர். அவர்கள் திரும்ப வருவார்களா என்ற சந்தேகம் உள்ளது.
எனவே பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க அரசுதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.