பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு நீர்.. 5 சுற்று உறுதி! திருமூர்த்தி திட்டக்குழு கூட்டத்தில் முடிவு

0
24

பொள்ளாச்சி: திருமூர்த்தி அணையில் இருந்து, இரண்டாம் மண்டலத்துக்கு ஐந்தாம் சுற்று தண்ணீரும்; மூன்றாம் மண்டலத்துக்கு, ஜன., மாதம் மூன்றாவது வாரத்திலும் தண்ணீர் திறந்து ஐந்து சுற்று வழங்க, திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு பருவமழை கை கொடுக்காத சூழலில், நிலை பயிரான தென்னை உள்ளிட்டவை காப்பாற்ற உயிர் நீர் மட்டும்வழங்கப்பட்டது. அதுவும் பற்றாக்குறையாக இருந்ததால், தென்னை மரங்களை காக்க விலைக்கு நீர் வாங்கும் சூழல் ஏற்பட்டது.

நடப்பாண்டு எதிர்பார்த்தது போன்று பருவமழை கை கொடுத்ததால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பியது. தொகுப்பு அணைகளில் இருந்து, சர்க்கார்பதிக்கு நீர் திறக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது.

திருமூர்த்தி அணை நிரம்பியதும், இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆழியாறு, பாலாறு படுகைக்கு நீர் பங்கீடு சமமாக இல்லை எனக்கூறி திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு குற்றச்சாட்டு தெரிவித்தது.

இதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், திருமூர்த்தி அணை வாயிலாக பாசனம் பெறும், மூன்றாம் மண்டலத்தில், 94,500 ஏக்கர் நிலங்களுக்கு, 11,600 மில்லியன் கனஅடி நீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதற்கு அதிகாரிகள், 10 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் மட்டுமே வழங்க முடியும்; அதற்கு மேல் வழங்க வேண்டுமென்றால் நீர் இருப்பு விபரத்தை கணக்கிட்டு, அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்வதாக தெரிவித்ததால் உடன்பாடு ஏற்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், நேற்று திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம், பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன் முன்னிலை வகித்தார்.

செயற்பொறியாளர்கள் நரேந்திரன், சிவக்குமார், மகேந்திரன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:

ஆழியாறு புதிய ஆயக்கட்டு, பாலாறு புதிய ஆயக்கட்டுக்கு சமமாக நீர் பங்கீடு செய்து தரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதுள்ள தண்ணீரை பொறுத்தவரை, 11.6 டி.எம்.சி., தர இயலாது. எனவே, இந்த முறை இருக்கும் தண்ணீரை வைத்து சமாளிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, மூன்றாவது மண்டலத்துக்கு, தண்ணீர் இருப்பை கணக்கீடு செய்து, 10 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் எனக்கூறியதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்

கூட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்தில், நான்காவது சுற்று தண்ணீர் வரும், 16ம் தேதி முடிகிறது. இதைத் தொடர்ந்து, டிச., 17ம் தேதி முதல் ஐந்தாவது சுற்று தண்ணீர் வழங்கப்படும். ஐந்தாவது சுற்று தண்ணீர், ஜன., இரண்டாவது வாரத்தில் நிறைவு பெறும்.

அதன்பின், ஒருவாரத்தில் கால்வாய் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு, ஜன., மாதம் மூன்றாவது வாரத்தில் மூன்றாம் மண்டலத்துக்கு நீர் திறக்கவும், ஐந்து சுற்று தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது மண்டலத்துக்கு தண்ணீர் திறப்பு தேதி குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.