பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு! பாசன நீர் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

0
9

சூலுார்; பி.ஏ.பி., வாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் திருடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,என, கடைமடை விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தில், (பி.ஏ.பி.,) கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம், 3 லட்சத்து, 77 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. இத்திட்டம் விவசாயிகளின், உயிர் நாடியாக உள்ளது. போதுமான மழைப்பொழிவு இல்லாத போது, சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பாற்ற பாசன நீர் முக்கியமானதாக உள்ளது. மேலும், வாய்க்காலில் தண்ணீர் செல்லும் காலங்களில், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதால், விவசாயிகளுக்கு பலன் கிடைத்து வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதி, பாசன நிலங்கள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில், ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன. தென்னை முதல் சிறு காய்கறிகள் இந்த தண்ணீரால் வளர்ச்சி அடைக்கின்றன.

தண்ணீர் திருட்டு

திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் செல்லும் 120 கி.மீ., தூரம் உள்ள பிரதான கால்வாய் மற்றும் பல நூறு கி.மீ., தூரம் கிளை கால்வாய்கள், பகிர்மான கால்வாய்கள் செல்கின்றன. இந்த கால்வாய்களில் நேரடியாகவும், பைப் பதித்தும் தண்ணீர் திருட்டு நடக்கிறது. மேலும், கரையோரம் கிணறு அமைத்து, கால்வாயில் துளையிட்டு, பைப் பதித்து அதன் மூலமும் தண்ணீர் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

விவசாயம் மற்றும் வணிக நோக்கத்துக்காக தண்ணீர் பல இடங்களில் திருடப்படுவதால், பி.ஏ.பி.,பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காததால் பயிர் சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது.

கண்காணிப்பு குழு

தண்ணீர் திருட்டை தடுக்க, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின் வாரியம், போலீசார் கொண்ட கண்காணிப்பு குழுக்கள் உள்ளன. அக்குழுக்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், தண்ணீர் திருட்டு அதிகரித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாசன தண்ணீர் திருட்டை தடுக்க, கூட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அடிக்கடி கள ஆய்வு செய்து, முறைகேடாக தண்ணீர் திருடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்துடைப்புக்காக ஒரு சில இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து, அறிக்கை

தாக்கல் செய்து விடுகின்றனர். ஆனால், தண்ணீர் திருட்டு நின்றபாடில்லை.

உள்ளூர் அளவில் குழு அமைத்து, அதன் மூலம் கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வு கண்டால் தான் எங்களால் விவசாயம் மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கண்காணிப்பு குழு அதிகாரிகள் கூறுகையில்,’ சுமார், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விதி மீறல்கள் கண்டறியப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் தொடர்பாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’ என்றனர்.