பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம்(பி.ஏ.பி.), ஆழியாறு வடிநில கோட்டம், ஆழியாறு வடிநில உபகோட்டத்துக்கு உட்பட்ட செட்டியக்காபாளையம், ஆண்டிபாளையம், வடசித்தூர், கப்பளாங்கரை ஆகிய கிராம நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல குழு உறுப்பினர்கள் கூட்டம் ஆண்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு செட்டியக்காபாளையம் கிராம நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ஆண்டிபாளையம் நல்லதம்பி தலைமை தாங்கினார். ஆண்டிபாளையம், கப்பளாங்கரை, வடசித்தூர் கிராம நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் ரவி, மகேந்திரன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சி மண்டல குழு உறுப்பினர் செ.ஆ.துரை, நீர்வளத்துறை சார்பில் பொறியாளர் சக்திகுமார், உதவி பொறியாளர் ராஜன் ஆகியோர் பேசும்போது, வருகிற 2-வது மண்டல பாசனத்திற்காக நடைபெற்று வரும் கால்வாய்களை தூர்வாரும் பணி, பிற கால்வாய்களை விரைவில் தூர்வாருவது குறித்து விளக்கினர். மேலும் நீர் பங்கிட்டு பணிகளில் பாசன சங்கங்களின் கடமைகள் மற்றும் ஒவ்வொரு சங்கத்திற்கும் நிதிக்குழு, நீர் நிர்வாக குழு, பணிகள் குழு, கண்காணிப்பு மதிப்பீட்டு ஆய்வு மற்றும் பயிற்சிக்கு துணை குழுக்களை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. நீர் பங்கீட்டு பணிகளில் சங்க பொறுப்பாளர்கள் முழுமையாக ஈடுபட்டு அனைத்து விவசாயிகளுக்கும் கடைமடை வரை நீர் சென்றடைய ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.