பி.ஏ.பி., காண்டூர் கால்வாயில் ‘டிரெக்கிங்’ பாதுகாப்பு கேள்விக்குறி

0
15

பொள்ளாச்சி:தமிழக அரசின் மலையேற்ற திட்டத்தில், 40 இடங்களில், ‘டிரெக்கிங்’ செல்ல இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதன்படி, எளிமையான மலையேற்ற திட்டத்தில் மானாம்பள்ளி பகுதியும், மிதமான மலையேற்ற திட்டத்தில் ஆழியாறு பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ‘ஆழியாறு கானல் பாங்க்’ என்ற பெயரில், ஆழியாறில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக, 8 கி.மீ., துாரம், 3 மணி நேரம் மலையேற, 1,700 ரூபாய் கட்டணமாக இணையதளம் வழியாக செலுத்தி மலையறுகின்றனர். இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அரசின் வனத்துறை இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொள்ளவில்லை. அரசுக்கு வருவாய் கிடைப்பதற்காக பாதுகாக்கப்பட்ட பகுதியில், மலையேற்றம் செல்ல அனுமதிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை அரசு சிந்திக்கவில்லை.

பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள, பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் வழியாக யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பது, விவசாயிகளின் ஒருமித்த எதிர்ப்பாக உள்ளது.

திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:

கால்வாய் பகுதியில், மலையேற்றம் செல்வோர், ஆர்வ கோளாறில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளான சர்க்கார்பதி பவர் ஹவுஸ், காண்டூர் கால்வாய், சர்க்கார்பதிக்கு தண்ணீர் வரும் பாதையை ‘போட்டோ’ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

மலையேற்றம் செய்வது போன்று, சமூக விரோதிகள் இப்பகுதிக்கு வந்து, கால்வாயை சேதப்படுத்தினால், அதற்கு யார் பொறுப்பேற்பர்.

கால்வாயின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். வனத்துறை இத்திட்டத்தை கைவிட்டு, மாற்று இடத்தில் மலையேற்றத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.