பிளேக் மாரியம்மன் கோவில்
கிணத்துக்கடவில் ஆர்.எஸ் ரோட்டில் பிரசித்திபெற்ற பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 112-வது குண்டம் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடிகம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 26 -ந்தேதி இரவு பிளேக் மாரியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. மார்ச் மாதம் 4- ந் தேதி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு பூஜையும், பிளேக்மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. இரவு கோவில் வளாகத்தில் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சக்தி விந்தை ஆற்றில் இருந்து கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பிளேக் மாரியம்மன் பூப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. 5-ந் தேதி காலை 7 மணிக்கு பக்தர்கள் பிளேக்மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்ச்சை கடன் செலுத்தினார்கள்.
குண்டம் திறப்பு நிகழ்ச்சி
நேற்று முன்தினம் காலை குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குண்டத்திற்கு பூ வளர்ப்பு நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மாமாங்கம் ஆற்றிலிருந்து பூவோடு கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பிளேக் மாரியம்மனுக்கு பூவோடு கையில் ஏந்தி நேர்ச்சை கடன் செலுத்தினார்கள்.பின்னர் பிளேக் மாரியம்மன் பூ பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று காலை பூச்செண்டு மற்றும் கரகங்கள் அழைத்து வர ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விரதமிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி…. பராசக்தி என்ற கோஷத்துடன் குண்டம் இறங்கினார்கள். ஒருசிலர் குழந்தைகளுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து பிளேக் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று திருவீதி உலா நடைபெறுகிறது.