தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. மாநில அளவில் சென்றாண்டு நான்காமிடத்தை பிடித்த நிலையில், இம்முறை கோவை மாவட்டம் முதலிடத்தைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை கல்வி மாவட்டத்தில், 1,387 பள்ளிகள் உள்ளன. 2024-25ம் கல்வியாண்டில், 16,353 மாணவர்கள், 18,941 மாணவிகள் மற்றும், 649 தனித்தேர்வர்கள் என, 35,294 பேர் தேர்வெழுதினர். கடந்தாண்டு, 33,399 பேர் தேர்வு எழுதினர்; இந்தாண்டில் தேர்வெழுதிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இன்று, காலை, 9:00 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளியில் சமர்ப்பித்த மொபைல் போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, ‘டிஜிலாக்கர்’ வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.inresults.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மறுதேர்வு அறிவிப்பு, விடைத்தாள் நகல், மதிப்பெண் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு தொடர்பான விவரங்கள் தேர்வு முடிவு வெளியானதும் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
‘வழிநடத்துவது பெற்றோர் பொறுப்பு’
தமிழ்நாடு உளவியல் சங்க தலைவர் பாலமுருகன் கூறியதாவது:எனக்கு இத்தனை மதிப்பெண் வரும், ‘கட்- ஆப்’ எடுப்பேன் என எதிர்பார்ப்பு வைத்திருக்கும் மாணவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத பட்சத்தில், மனச்சோர்வுக்கு ஆளாவர். இத்தகைய மனநிலையில் உள்ள மாணவர்களின் பெற்றோர், அவர்களது உணர்ச்சிகளை புரிந்துகொண்டு, எதிர்மறை வார்த்தைகள் பேசாமல், மன உறுதியுடன் வழிநடத்துவது மிக முக்கியம்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வாழ்க்கையின் முடிவல்ல; வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் நுழைவுச்சாவி மட்டுமே என்பதை உணர வேண்டும். பிடித்த கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் கூட, நுண்ணுணர்வு மற்றும் உணர்வுப் பொறுப்பை பெற்றோர் காட்டும் பொழுது, மாணவர்கள் சோர்வு மனநிலையில் இருந்து எளிதாக மீண்டெழுந்து, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வர். பெற்றோர், தங்களது பொறுப்பை சரியாக புரிந்துகொண்டு செயல்படுவதே, மாணவர்களின் நலனுக்கு அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.