காயத்துடன் சுற்றிய யானை
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர் கிராமங்களில் காட்டு யானை வாயில் காயத்துடன் சுற்றி திரிந்து வந்தது. மேலும் விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் யானையை பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் இருந்து சின்னதம்பி கும்கி யானை வரவழைக்கப்பட்டது. பின்னர் காயத்துடன் சுற்றி திரிந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கும்கி யானை உதவியுடன் யானையை பிடித்து லாரியில் ஏற்றி டாப்சிலிப் வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மரக்கூண்டில் அடைப்பு
பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த மரக்கூண்டில் யானையை வனத்துறையினர் அடைத்தனர். மேலும் மற்ற காட்டு யானைகள் முகாமிற்கு வருவதை தடுக்க கும்கி யானைகள், பாகன்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ குழுவினர் யானையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வாயில் காயம் ஏற்பட்ட யானை மேல்சிகிச்சைக்காக டாப்சிலிப் வரகளியாறு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. யானையால் சாப்பிட முடியாததால் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க குளுக்கோஸ் செலுத்தப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் டாக்டர்கள் விஜயராகவன், சுகுமாரன், சதாசிவம் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.