பா.ஜ., பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் மீது ‘குண்டாஸ்’

0
4

கோவை; பா.ஜ., பிரமுகர் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட்டனர்.

கோவை செல்வபுரம் போலீசார் கடந்த மாதம், 12ம் தேதி அதிகாலை அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில், இரு பெட்ரோல் குண்டுகளுடன் வந்த நபரை பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சுகுணாபுரத்தை சேர்ந்த நாசர், 34, எனத் தெரிந்தது. பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தெற்கு கோட்ட பொறுப்பாளர் மணிகண்டன் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசுவதற்காக, கொண்டு சென்றதும் தெரிந்தது.

நாசர், மணிகண்டனிடம், ரூ.5,000 கடன் கேட்டு அதற்கு மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாசர் தனது நண்பர்களான கரும்புக்கடையை சேர்ந்த, பைசல் ரகுமான், 30, ஜாகிர் உசைன், 35, இதயதுல்லா, 36, முகமது ஹர்சத் ஆகியோரிடம், தனக்கு பணம் கொடுக்காமல் அசிங்கப்படுத்தியதாக தெரிவித்தார்.

நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து, மணிகண்டனுக்கு பாடம் கற்பிக்க, திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச கூறியுள்ளனர். நாசரிடம் ரூ.200 கொடுத்து பெட்ரோல் வாங்க கூறினர்.

பணத்தை பெற்றுக் கொண்ட நாசர், தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள மணிகண்டன் அலுவலகத்தில் வீச எடுத்துச் செல்லும் போது, போலீசில் சிக்கிக் கொண்டார்.

நாசர் உட்பட ஐந்து பேரையும், போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதால், அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார்.