பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

0
105

மின் கட்டண உயர்வை கண்டித்து கோவையில் பா‌.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை மாநகர மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமை தாங்கினார். இதில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதிசீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

வரலாறு காணாத அளவுக்கு மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது. இதனால் தொழிற்சாலைகளில் செலவு அதி கரிக்கும். பெரியார் வழிக்கு தள்ளாதீர்கள் என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுகிறார். பா.ஜ.க. சார்பில் சவால் விடுகிறோம். தி.மு.க. தலைவர்களுக்கு தனி தமிழ்நாடு கேட்க தைரியம் இருக்கிறதா?.

பா.ஜ.க. காரணமா?

கொங்குநாடு கோரிக்கை எழுந்தது. தமிழகத்துக்கு அதிக வருவா யை கொடுக்கும் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுவதால் நிர்வாக வசதிக்காக பிரிக்க கேட்கின்றனர். குடியரசு தலைவரின் பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சிக்கு சென்றதால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வில்லை.

எந்த விலை உயர்வு ஏற்பட்டாலும் அதற்கு பா.ஜ.க. காரணம் என்கின்றனர். சமீபத்தில் மது விலையை தமிழக அரசு உயர்த்தி யதுக்கும் பா.ஜ.க.தான் காரணம் என்று கூற முடியுமா?.

மத்திய அரசின் மீது பழி போடுவதை விட்டுவிட்டு தமிழக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது துண்டு விரித்து லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திட்டங்கள் இல்லை

மின்கட்டண உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் என உண்மைக்கு புறம்பாக சொல்லி மக்களை திசை திருப்புகின்றனர். அத்தியாவசிய தேவைகளை கூட மக்களுக்கு கொடுக்க முடியாத அரசாக தி.மு.க. இருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் பெட்ரோல், டீசல் விலைமாறிக்கொண்டு இருக்கும். சோலார் மின் திட்டம் குறித்து தமிழக அரசின் கருத்து என்ன? தமிழக அரசிடம் திட்டங்கள் இல்லாததால் மத்திய அரசின் மீது பழி போடுகின்றனர்.

உதய் மின்திட்டத்தில் உள்ள சீர்திருத்தங்கள் குறித்து தமிழக அரசு ஏன் பேசுவதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடிக் கணக்கில் பணம் பாழாகி இருக்கிறது. தமிழகத்தின் நலனுக்காக பா.ஜ.க.வின் குரல் முதல் குரலாக ஒலிக்கிறது. இவர் அவர் கூறினார்.