பாலியல் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் ‘டிஸ்மிஸ் ‘; கோவையில் அனைத்து தரப்பினரும் வரவேற்பு

0
7

கோவை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், 238 பேர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், தண்டனை உறுதிசெய்யப்பட்ட, 25 பேரை பள்ளி கல்வித்துறை ‘டிஸ்மிஸ்’ செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மக்கள் இது குறித்து சொல்வதென்ன?

‘தண்டிக்கப்பட வேண்டும்’

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; வரவேற்கிறோம். சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி, பணம் கொடுத்து தப்பிப்பவர்களும் உண்டு. எனவே, அவர்கள் தப்பிக்காமல் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது பொய் புகார் அளிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. உண்மையாக தவறு நடந்திருந்தால், தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அதேசமயம், நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருக்க, தீவிர விசாரணை செய்ய வேண்டும்.

– அரசு, மாவட்ட செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (கோவை மாவட்டம்).

‘வரவேற்கிறோம்’

குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும் குற்றம்தான். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதுபோன்ற நடவடிக்கை, குழந்தைகள் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். தவறு செய்த ஆசிரியர்கள் மீது, ‘டிஸ்மிஸ்’ நடவடிக்கை என்பது வரவேற்கத்தக்கது

– அருளானந்தம், மாநில துணைத்தலைவர்

‘வேதனைக்குரியது’

ஒரு சில வக்கிர எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் செய்யும் தவறு, மற்ற ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவது வேதனைக்குரியது. இதனால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோரிடம் பயம் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் இதுபோன்ற தீய எண்ணங்களுக்கு இடம்கொடுக்காமல், குழந்தைகளை நல்ல முறையில் வழிநடத்த வேண்டும்.

– தங்கராஜ், பி.எஸ்.என்.எல்., முன்னாள் ஊழியர், சிங்காநல்லுார்.

‘ஆசிரியர்களுக்கு பாடம்’

ஆசிரியர்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கை, வரும் காலங்களில் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஓர் பாடமாக அமையும். அதே சமயம், இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில், போதை பொருட்கள் புழக்கம் சமுதாயத்தை சீரழித்து, இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்து செல்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

– கண்ணன் வாகன சர்வீஸ் பணி, பட்டணம்.