பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்க ‘கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம்’ அவசியம் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு யோசனை

0
8

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நஞ்சேகவுண்டன்புதுாரில் நடந்த புற்றுநோயில் இருந்து மீண்டவர்களை ஊக்கப்படுத்தும் விழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியதாவது:

தமிழக முதல்வர், பெண்களை பாலியல் பலாத்காரம், பின்தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாக்களை சட்டசபையில் தாக்கல் செய்தார். அரசு சட்டங்களை கடுமையாக்கியது பாராட்டுக்குரியது.

காவல்துறைக்கு கிடைத்த ஆயுதமாக இந்த சட்டம் உள்ளது. பாலியல் வழக்கில் தண்டனை பெற்றோர், ஏற்கனவே பாலியல் தண்டனை பெற்றவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

வெளிநாடுகளில், தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்கள் உடலில், ‘மைக்ரோ சிப்’ பொருத்தி கண்காணிக்கப்படுகிறது

அதேபோன்று, கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம் அதிகாரம் காவல்துறைக்கு கொடுத்தால், இதுபோன்று பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்க முடியும்.

அவர்கள் எங்கே செல்கின்றனர்; பெண்கள் கல்லுாரி, குழந்தைகள் உள்ள இடத்துக்கு சென்றால், அதை கண்டறிந்து கைது செய்ய முடியும்.

மனித சுதந்திரத்தை மதிக்கக் கூடிய நாடுகளில் உள்ளது போன்று, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து கண்காணிக்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.