பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில்… விழிப்புணர்வு!  குழந்தை திருமணங்களை தடுக்க தீவிரம்

0
4

மேட்டுப்பாளையம்: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும், தகுந்த ஆலோசனைகள் வழங்கவும் பெற்றோர், ஆசிரியர் சிறப்பு கூட்டத்துக்கு கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், வரும் 26ம் தேதி, மாணவர்கள் மற்றும் பள்ளியின் பாதுகாப்பு சார்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த, பள்ளிக் கல்வி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனை

பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து, விவாதித்து பிரசாரங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க தேவையான வழிமுறைகள், மாணவர்களிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்களை கண்காணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

இலவச அழைப்பு எண்

ஆண், பெண் இருவரும் உள்ள பணியிடங்களில் உள்புகார் குழு ஒன்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள், பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள் போன்ற விவரங்கள், மாணவர்களின் மனநிலை சார்ந்த அறிவுரைகள், தேர்வு எதிர்கொள்வது மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்குதல், போன்ற தகவல்கள், தன் பாதுகாப்பு சார்ந்த ஆலோசனைகளை 14417 என்ற இலவச அழைப்பு எண்ணில் பெற்றுக்கொள்ளலாம்.

மகளிர் நலன் பாதுகாப்பு மற்றும் சந்தேகங்களுக்கு வழிகாட்டும் 181 என்ற மகளிர் உதவி மைய எண் உள்ளது. இது குறித்து விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்படும்.

குழந்தைகள் நலன் பாதுகாப்பு, சிறார் திருமணங்கள் தடுப்பு மற்றும் அதை சார்ந்த சந்தேகங்கள் போன்றவற்றை அளிக்க 1098 எனும் எண்ணில் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இது போன்ற பள்ளி மற்றும் மாணவர் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.—