பாறை உருண்டு விழுந்தது
கோவை மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் அரசு பட்டா வழங்கிய நிலத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அங்கு லீலாவதி என்பவர், தனது மகள் வசந்தகுமார், பேத்தி சசிகலா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று லீலாவதி, தனது பேரக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த போது திடீரென வீட்டின் சுவர் மீது பயங்கர சத்தத்துடன் ஏதோ மோதுவது போல் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அருகே இருந்த பாறை ஒன்று உருண்டு வந்து வீட்டின் சுவர் மீது மோதி கிடந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் மற்றோரு ராட்சத பாறை உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியதில் சுவரின் ஒரு பக்கம் உடைந்து விழுந்தது. இதில் வீடு சேதம் அடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த சம்பவத்தின்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் மற்றும் மதுக்கரை வட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயகவுசல்யா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பாதிக்கப்பட்வர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.