கோவை: கோவை மாவட்டத்தில், 100 பார்வையற்ற நபர்களுக்கு ‘ஹியர்சைட்’ சாதனம் வழங்கும் நிகழ்ச்சி, ‘செஸ்சியர் ஹோம்ஸி-ல்’ நடந்தது. முதல்கட்டமாக, 31 பேருக்கு கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
பின், கலெக்டர் பேசியதாவது:
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக, ‘ஹியர்சைட்’ சாதனம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பொருளை கண்டறிதல், சுற்றுச்சூழல் அறிதல் மற்றும் பாதை வழிகாட்டுதல் உள்ளிட்ட நிகழ்நேர செவிவழி விளக்கங்கள் மூலம் பார்வை குறைபாடு உள்ளவர்கள், சுற்றுப்புறங்களுக்கு சுதந்திரமாகச் செல்ல வழிவகுக்கும்.
இத்தொழில்நுட்பம் அவர்களது செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, சமூகப் பங்கேற்பை வளர்த்து, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகவாழ்வில் மிகவும் சிறப்பாக ஈடுபட பயனுள்ளதாக இருக்கும்.
‘போர்ஜ் இன்னோவேஷன் அண்டு வென்ச்சர்ஸ்’ நிறுவனம், கரூர் வைஸ்யா வங்கியின் சி.எஸ்.ஆர்., நிதி மூலம் ‘ஹியர்சைட் ஆடியோ விஷன் நிறுவனம்’ வாயிலாக, பார்வை குறைப்பாடுள்ள 100 நபர்களுக்கு ‘ஹியர்சைட்’ சாதனம் வழங்கப்படுகிறது. பார்வை குறைபாடு உள்ளவர்கள், யாருடைய உதவியின்றி வாழ வேண்டும். பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்திருக்கக் கூடாது.
இதுபோன்ற தொழில்நுட்ப சாதனங்களால் தாங்களாகவே செயல்பட முடியும் என்கிற நம்பிக்கை வரும்; வாழ்க்கையில் முன்னேற முடியும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.