பாரதியார் பல்கலையில் பி.எச்டி., கட்டணம் உயர்வு

0
5

கோவை; கோவை பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 133 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன.

பல்கலையில், 39 துறைகள், 54 முதுநிலை கல்வி, எம்.பில்., பி.எச்டி., கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. ஏராளமான முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கின்றனர்.

பல்கலை நிர்வாகம், பி.எச்டி., மாணவர்களின் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கு, கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கட்டுரை சமர்ப்பிப்பதற்கான கட்டணம், ரூ.3,500 ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் ரூ.7,000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை திருத்தம், மறுசமர்ப்பிப்புக்கான கட்டணம், ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு ஏப்., முதல் அமலுக்கு வர உள்ளது.

கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், நேற்று பாரதியார் பல்கலையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘2019ம் ஆண்டுக்குப் பின் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்கலைக்கு வருவாய் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்துக்கு நிதி தேவை. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி, ஒரேடியாக உயர்த்தமால் சிறிது, சிறிதாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்டணத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.