கோவை; மூன்றரை ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், சுழற்சி முறையில் துறை தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல், பாரதியார் பல்கலை காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பாரதியார் பல்கலையில், 39 துறைகளின் கீழ், 54 முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 133 கல்லுாரிகள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.
இப்பல்கலையில், 2022ம் அக்., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. தவிர, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன், துணை பதிவாளர், தொலைதுார கல்வி மைய இயக்குனர், நிதி அலுவலர், பல்கலை பொறியாளர், உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு அதிகாரி உட்பட, 330 பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாகவுள்ளன.
பல்கலையில், துறை தலைவர் பணியிடங்களில் பல ஆண்டுகளாக ஒரே பேராசிரியர் இருந்து வருவதாகவும், அப்பணியிடத்தை சுழற்சி முறையில் நிரப்ப வேண்டும் எனவும், பல்கலை பேராசிரியர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் சங்கமும் இதே கோரிக்கையை, கடந்த மூன்றரை ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், பல்கலை நிர்வாகம் செவிமடுத்ததாக தெரியவில்லை.
பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் சங்க தலைவர் வசந்த் கூறியதாவது:
ஒரு நபர், 45 வயதில், துறை தலைவராக பதவி உயர்ந்தால், 15 ஆண்டுகள் தொடர்ந்து அவர் ஒருவரே அப்பதவியில் இருக்கிறார். இதனால், இளைஞர்கள் அந்த பதவிக்கு வரமுடிவதில்லை. இதைக்கருத்தில் கொண்டே, துறைத்தலைவர் பணியிடத்தை சுழற்சி முறையில் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக பல்கலை நிர்வாகம், உயர் கல்வித்துறை அதிகாரிகள் என, அனைத்து தரப்பினரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நடவடிக்கையும் இல்லை. பாரதிதாசன் உள்ளிட்ட பல பல்கலைகளில் இந்நடைமுறை அமல்படுத்தப்பட்டு விட்டது. பாரதியார் பல்கலையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இளம் ஆசிரியர்கள் நலனைக்கருத்தில் கொண்டு, இந்நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா கூறுகையில், ”இதுகுறித்து, சிண்டிகேட் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்படும். அதற்கான ஒப்புதல் கிடைத்தால், திட்டத்தை செயல்படுத்த முடியும். சிண்டிகேட் முடிவின்படியே செயல்பட முடியும்,” என்றார்.
ஒரு நபர், 45 வயதில், துறை தலைவராக பதவி உயர்ந்தால், 15 ஆண்டுகள் தொடர்ந்து அவர் ஒருவரே அப்பதவியில் இருக்கிறார். இதனால், இளைஞர்கள் அந்த பதவிக்கு வரமுடிவதில்லை. இதைக்கருத்தில் கொண்டே, துறைத்தலைவர் பணியிடத்தை சுழற்சி முறையில் ஒதுக்க வேண்டும்