திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு ஆயக்குடியில் உள்ள ஓபாலப்பட்டியை சேர்ந்தவர் பிரபு(வயது 37). டெய்லர். இவருடைய மனைவி பிரியா. இவர்களது மகன் லோகேஸ்வரன்(5). இவர்கள் வேலை நிமித்தமாக கிணத்துக்கடவு அருகே தேவராயபுரத்தில் உள்ள சாத்தையன் கோவில் வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவில் லோகேஸ்வரன் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக ஊர்ந்து வந்த பாம்பு திடீரென லோகேஸ்வரனை கடித்தது. இதனால் அலறித்துடித்த அவன் ஓடிச்சென்று தாயாரான பிரியாவிடம் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், லோகேஸ்வரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லோகேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.