பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் திட்டம்: எல்லைகளில் தீவிரம் அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு

0
62

பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட எல்லைகளில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, அதிநவீன கேமராக்களை பொருத்த மாவட்ட காவல் துறை முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், கோவை மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மாவட்டத்தின் எல்லையோரங்களில் அதுவும் தமிழக, கேரளா எல்லை ஓரங்களில் நக்சல் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அவர்களின் ஊடுருவலை முறியடிக்கவும், பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, காரமடை, முள்ளி, கோபனாரி, மாங்கரை, ஆனைகட்டி, வாளையார், வேலந்தாவளம், வீரப்ப கவுண்டனூர், கோபாலபுரம், நடுபுனி வடக்கு காடு, ஜமீன் காளியாபுரம், மீனாட்சிபுரம் ஆகிய சோதனை சாவடிகளில் போலீசார், 24 மணி நேரமும், 4 ஷிப்டுக்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கோவை வடக்கு பகுதியில் தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இக்கேமராக்கள் வாயிலாக தற்போது சோதனை சாவடியை கடந்து செல்லும் வாகனங்களை மட்டுமே கண்டறிய முடியும். வாகனங்களின் எண் உள்ளிட்டவையை கண்டறிய முடியாது. இதனால் தமிழக, கேரளா எல்லையை கடந்து செல்லும் வாகனங்களின் நிலையை, துல்லியமாக, கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்ட மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏ.என்.பி.ஆர்., கேமரா பொருத்த, கோவை மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, தடாகம் போலீசார் கூறுகையில்,’ மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும், முறைப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அனுமதிக்கப்படுகிறது. மேலும், கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்படுகின்றனவா, நக்சல் நடமாட்டம், ரேஷன் அரிசி கடத்தல், குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் வாகனங்கள் வாயிலாக கேரளாவுக்குள் நுழைகின்றனரா என்பதை கண்காணிக்க, அதிக நவீன வசதிகள் கொண்ட ஏ.என்.பி.ஆர்., கேமரா விரைவில் பொருத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள, 14 சோதனை சாவடிகளில் வாளையாறு சோதனை சாவடி மற்றும் பொள்ளாச்சி நடுப்புணியில் மட்டுமே அதிநவீன கண்காணிப்பு கேமராவான ஏ.என்.பி.ஆர்., பொருத்தப்பட்டுள்ளது. மற்ற சோதனை சாவடிகளிலும் இந்த கேமரா விரைவில் பொருத்தப்படும்.

இது தவிர, ஆனைகட்டியை சுற்றியுள்ள தூமனூர், சேம்புகரை, கொண்டனூர், கொண்டனூர் புதூர், பனப்பள்ளி, ஜம்புகண்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் நக்சல் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய, போலீசார் ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலை கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து அவ்வப்போது மலை கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள பழங்குடியினரிடம் விசாரணை நடத்தி வருகின்றோம்’ என்றனர்.

துல்லியமாக பதிவு செய்ய முடியும்

ஏ.என்.பி.ஆர்., என்றால் தானாக வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்களை அடையாளம் காணும் கேமரா என பொருள்படும். வாகனங்கள், சோதனை சாவடிகளை எத்தனை வேகத்தில் கடந்து சென்றாலும், இரவு நேரத்திலும், குறிப்பிட்ட வாகனத்தின் எண்ணை தெளிவாக கண்டறிய முடியும். இதனால் புலனாய்வு செயல்களுக்கு ஆணிவேராக இக்கேமரா பயன்படும். இது தவிர, போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கவும், வாகன நிறுத்த இடங்களிலும், வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம்.