பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

0
67

பொள்ளாச்சி அருகே கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணைக்கு சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் வருகிறது. இதை தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

கடந்த மாதம் 19-ந்தேதி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு கடந்த 20 நாட்களாக மழைப்பொழிவு குறைந்தது. இதனால் நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

உபரிநீர்

சோலையார் அணையில் மின் உற்பத்தி நிலையம் 1-யில் மின் உற்பத்தி செய்யப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. -மேலும் சேடல் பாதை வழியாக வினாடிக்கு 3000 கன அடி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு வினாடிக்கு 1850 கன அடி நீர்வரத்து உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 68.58 அடியை எட்டியது.

அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக வினாடிக்கு 5656 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று திடீரென்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணங்கள் இல்லாமல் குரங்கு நீர்வீழ்ச்சி வெறிச்சோடியது.