பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

0
99

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இதற்கிடையில் கவனக்குறைவு காரணமாக பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் பஸ் நிலையம், கடை வீதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிலைய அலுவலர் கணபதி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது:-

பொதுமக்கள் கடையில் பட்டாசுகளை வாங்கி செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பட்டாசுகளை சமையல் அறை பகுதிகளில் வைக்க கூடாது. பஸ் நிலையம், கியாஸ் குடோன், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிப்பதால் உடல், மனம் பாதிப்பதோடு, செவித்திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த வகை பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

விபத்தில்லா தீபாவளி

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பட்டாசுகளை வெடிக்க கூடாது. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் அருகில் நிற்க வேண்டும். மேலும் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். ராக்கெட், புஷ்வானம் போன்ற பட்டாசுகளை வைக்கோல், குடிசைகள், தென்னை ஓலை வேய்ந்த கூரைகள் அதிகம் உள்ள இடங்களில் வெடிக்காமல் திறந்த வெளியில் வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளை டின், டப்பா, கண்ணாடி பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தீக்காயத்திற்கு குளிர்ந்த நீரை ஊற்றிய பின்னர் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். இந்த தீபாவளியை விபத்து இல்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.