பாதுகாக்கப்படாத குடிநீர்! வரவழைத்து விடுமாம் ‘கேன்சர் ‘ ; உணவு பாதுகாப்புத்துறை ‘பகீர்’

0
4

கோவை: வெயில் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், வாட்டர் கேன், வாட்டர் பாட்டில் விற்பனையும் அதிகரித்துள்ளது. உரிய ஸ்டிக்கர் இல்லாமல் உள்ள குடிநீர் பாட்டில், கேன்கள், வெயிலில் வைக்கப்படும்,பாட்டில்கள், கேன்களை வாங்க வேண்டாம் என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கோடைகாலம் இன்னும் துவங்காத நிலையிலும், கோவையில் வெயில் தாக்கம் வாட்டி வதைக்கிறது. பகல் நேரத்தில், 34-35 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேரத்தில், 24-25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. தவிர, காற்றின் ஈரப்பதம் அளவும் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.

கோவையில், 69 கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் வாயிலாக, ஆயிரக்கணக்கான வீடுகள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் என அனைத்து இடங்களுக்கும், தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

வாட்டர் கேன், பாட்டில் விற்பனை செய்வதிலும், நிறுவனங்கள் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஆனால், தரமற்ற கேன்களில் தண்ணீர் நிரப்பி உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல், பெரும்பாலான இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக, வாட்டர் கேன்கள், பாட்டில்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இதனால், பிளாஸ்டிக் கேன்களில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு, தண்ணீரின் தரத்தில் மாற்றம் ஏற்படுவதாக எச்சரிக்கிறார், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன்.

அவர் கூறியதாவது:

வெயில் தாக்கம் துவங்கியுள்ள நிலையில், குளிர்பானங்கள், பழச்சாறு விற்பனை கடைகளில் ஆய்வுகளை துவக்கியுள்ளோம். குறிப்பாக, வாட்டர் கேன் தயாரிப்பு நிறுவனங்கள், சப்ளையர், கடைகளிலும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

வாட்டர் கேன்களில் கட்டாயம், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். நிறுவனத்தின் பெயர், தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி, காலாவதி தேதி போன்ற, எப்.எஸ்.எஸ்.ஐ., பதிவு எண் அனைத்தும் இடம் பெற்று இருக்க வேண்டும்.

நன்றாக மூடப்பட்டு தண்ணீர் ‘லீக்’ ஆகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, முழுவதும் மூடப்பட்ட வாகனங்களில் மட்டுமே, வாட்டர் கேன்களை கொண்டு செல்ல வேண்டும்.

திறந்த நிலையில் உள்ள வாகனங்களில் எடுத்து செல்வதால், வெயில் பட்டு, வேதியியல் மாற்றம் ஏற்படும். இதனால், தண்ணீரின் தரம் மாறுபடும். இந்த தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால், புற்றுநோய் வரை வர வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் இதுபோன்று, உணவு சார்ந்த புகார்கள் இருப்பின், 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.