தினமலர் வழிகாட்டி நிகழ்வில், ‘வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகள்’ என்ற தலைப்பில், கல்வியாளர் ரமேஷ்பிரபா மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
அவர் பேசியதாவது:
மாணவர்களுக்கு பிடிக்காத, வராத பாடப்பிரிவை தேர்வு செய்ய பெற்றோர் ஒரு போதும் கட்டாயப்படுத்தக்கூடாது. பெற்றோர், பிள்ளைகள் குடும்பத்துடன் அமர்ந்து ஆலோசித்து சிறப்பான கல்லுாரி, பாடப்பிரிவை தேர்வு செய்யுங்கள். மருத்துவத்துறையை தேர்வு செய்யும் மாணவர்கள் நீட்., தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நீட்., இல்லாமல் பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்சி., நர்சிங் ஆகிய மருத்துவ படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம்.
மருத்துவம் தவிர, கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்தும் படிக்கலாம். இன்ஜினியரிங்கை பொறுத்தவரையில், 31 என்.ஐ.டி., நாட்டில் உள்ளன; அதில் இரண்டு தமிழகத்தில் உள்ளன.
ஜே.இ.இ., மெயின் தேர்வு மூலம் இங்கு சேரமுடியும். ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு எழுதி தகுதி பெற்றால், நாட்டில் உள்ள 23 ஐ.ஐ.டி., கல்விநிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.
அண்ணா பல்கலையின் கீழ், 400க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 2 லட்சம் இடங்கள் உள்ளன. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கட்டாயம் கிடைக்கும். சட்டம், கேட்டரிங், நுண்கலை, கலை அறிவியல் என உயர்கல்வியில், பல வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.