பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை, டில்லி அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தூதரக பாதுகாப்பு வாபஸ், சிந்து நதிநீர் நிறுத்தம் என அடுக்கடுக்கான நடவடிக்கைகளை முன் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை நாடு திரும்பவும், இங்குள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் உத்தரவிட்டது. அதை அந்தந்த மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியது.
இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை, டில்லி அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டில்லி உள்துறை அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டு உள்ளார். அதில் அவர் மேலும் கூறி உள்ளதாவது;
ராஜதந்திர மற்றும் நீண்டகால விசாக்கள் தவிர, தற்போதுள்ள அனைத்து செல்லுபடியாகும் விசாக்கள் ஏப்.2, 2025 முதல் ரத்து செய்யப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ விசாக்கள் ஏப்.29ம் தேதிக்கு பின்னர் செல்லாது. பாகிஸ்தானியர்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.