பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கடந்த ஏப்., 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தலங்களின் ஒன்றான பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை கண்டித்து தொடர்பாக சட்டசபையில் இன்று சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தாக்குதல் தொடர்பாக உரையை நிகழ்த்திய துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.
ஜம்மு காஷ்மீரின் மத ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் விதமாக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை நீத்த குதிரை ஓட்டி ஷாகித் சையத் அடில் ஹூஅசேன் ஷாவின் உயரிய தியாகத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, அவை தொடங்கும் போது, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிடம் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.