கோவை; பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பஸ் மற்றும் பஸ் ஸ்டாப்களில், கேமரா பொருத்த மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
2012ம் ஆண்டு, டில்லியில் பேருந்தில் நடந்த, கூட்டுப்பலாத்காரத்திற்கு பிறகு, மத்திய அரசு நிர்பயா நிதி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் இந்தியாவில் உள்ள பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நிதி ஒதுக்கப்பட்டது.
இதன்படி, கோவை மாநகர பகுதிகளில், பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பஸ்சில் கேமரா பொருத்த வேண்டும் என, போலீஸ் சார்பில் உத்தரவிடப்பட்டது. மாநகரில் உள்ள, 149 தனியார் டவுன் பஸ்களில் 129 பஸ்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதே போல், வெளியூர் செல்லும் 117 தனியார் பஸ்களில் 99 பஸ்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் மட்டுமின்றி அனைத்து அரசு பஸ்கள், 343 பஸ் ஸ்டாப்களிலும் கேமரா பொருத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர். திட்டங்களை செயல்படுத்த, நிர்பயா நிதியில் இருந்து ரூ. 8.6 கோடி நிதியை ஒதுக்க, கோவை மாநகர போலீஸ் சார்பில், கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ”பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரிடையே, மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் பஸ்சில் பயணம மேற்கொள்ளும் போது பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என, பலர் தெரிவித்தனர்.
ஆகவே, பெண்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளோம். மாநகரின் பல இடங்களில் உள்ள விளம்பர துாண்களிலும், கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக வகுக்கப்பட்டுள்ள சில திட்டங்களை செயல்படுத்த, நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,” என்றார்.