பஸ் நிலையத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றலாமே…!

0
149

கோவை மாவட்டம் வால்பாறையானது மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் உள்ளூர் மக்களும் பல்வேறு ேதவைகளுக்காக வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இங்கிருப்பது ஒரேயொரு மெயின் ரோடு மட்டுமே. இதுவும் குறுகலாகவே காணப்படுகிறது. ஆனாலும் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் தீர்க்கப்படாத நீண்ட நாள் பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. அங்கு சாலையோரங்களில் பலரும் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் பொருட்களை ஏற்றி இறக்க தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர். இது தவிர எஸ்டேட் பகுதி மக்கள் பொருட்கள் வாங்க நகருக்கு வரும்போது, தங்களது வாகனங்களை சாலையோரங்களில் முறையின்றி நிறுத்துகின்றனர்.

இடவசதி

இதற்கிடையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளும் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்துவதால், வால்பாறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கு காரணம், வாகன நிறுத்துமிடம் எதுவும் இல்லை என்பதுதான். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஒருபுறம் அதிகாரிகளிடம் கேட்டால், போதிய இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் மறுபுறம் இடவசதி இருந்தும், நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-

வாகன நிறுத்துமிடம்

வால்பாறையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வாகன நிறுத்துமிடம் அமைப்பதே சிறந்தது. அதற்கு இடவசதியும் உள்ளது. அதாவது நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான அண்ணா திடல், தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான பஸ் நிலையம் ஆகியவை எந்தவித பயனும் இன்றி கிடக்கின்றன.

இந்த இடங்களை பராமரித்து வாகன நிறுத்துமிடம் அமைத்தால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். அதன்படி நகரின் நுழைவு வாயிலாக விளங்கும் தபால் நிலையம் அருகில் போலீசாரை பணியமர்த்தி அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை அண்ணா திடலில் நிறுத்தவும், விடுதிகளில் தங்குபவர்களின் வாகனங்களை பஸ் நிலையத்தில் நிறுத்தவும் ஏற்பாடு செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.