மேட்டுப்பாளையம் : பவானி ஆறு மாசுபடுவதை தடுக்க, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
‘பவானி நதியை மீட்டெடுப்போம்’ சங்கம் சார்பில், சிறுமுகை முத்துசாமி திருமண மண்டபத்தில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு குமார ரவிக்குமார் தலைமை வகித்தார். ராஜன் வரவேற்றார்.
விவசாயிகள் பேசியதாவது:
பவானி நதி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. நதியில் எவ்வித தடையும் இன்றி, நகரின் சாக்கடை கழிவுகளும், தொழிற்சாலை கழிவுகளும், நேரடியாக ஆற்றில் கலந்து வருகிறது. இந்த கழிவுகளின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பவானி நதி கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் விவசாய நீர் தேவைக்கு இதயமாக உள்ளது. மேலும் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை, பவானி நதி பூர்த்தி செய்து வருகிறது.
பவானி நதி தொடர்ச்சியாக மாசடைந்து, நொய்யல் நதியை போல் சாக்கடையாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக பவானி நதியை மீட்டெடுப்போம் என்ற சங்கமம் பெயரில் சங்கம் துவக்கப்பட்டு உள்ளது. இதில் சாதி, மதம், மொழி, கட்சி அடையாளங்கள் இல்லாமல், அனைவரும் ஒன்றாக இணைந்து பவானி நதியை பாதுகாப்பது மட்டுமே, ஒரே இலக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் இது சம்பந்தமாக வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி, அதில் நல்ல தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள அனைத்து
கிராம மக்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த, கூட்டங்கள் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக, விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி நாயுடு உருவப்படத்திற்கு, விவசாயிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். ராமசாமி நன்றி கூறினார்.