தமிழக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பவளப்பாறை அழிந்துவரும் இனப்பட்டியலில் உள்ளது. எனவே இதனை விற்பது, அதில் இருந்து பொருட்கள் தயார் செய்து விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. கோவையில் இதனை கடத்தி வந்து சிலர் விற்பனை செய்வதாக தமிழக தலைமைச்செயலாளருக்கு புகார் செய்யப்பட்டது. அவர் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை நகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கோவை பேரூர் காளம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பழமையான நாணயங்கள் மற்றும் பவளப்பாறையில் இருந்து செய்யப்படும் பொருட்களை சாம்சன் (வயது43) என்பவர் விற்று வருவது தெரியவந்தது. இவர் வேடப்பட்டியை சேர்ந்தவர்.
பறிமுதல்
இதைத் தொடர்ந்து போலீசார் சாம்சன் கடைக்கு சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் விலை மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 4 பவளப்பாறைகள் மற்றும் பவள பாறைகளை கொண்டு செய்யப்பட்ட 2 மாலைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பவளப்பாறைகள் அந்தமான் கடலில் கிடைக்கக்கூடியது என்று தெரிகிறது. மேலும் ஒரு கிராம் ரூ.2,500 விலைக்கு சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பிடிபட்ட சாம்சனை மதுக்கரை வன அலுவலர் சந்தியாவிடம் ஒப்படைத்தனர்.
கைது
அவர் பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சாம்சனை கைது செய்தார். பவளப்பாறை விற்பனையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்று மேலும் யாரும் விற்பனையில் ஈடுபடுகிறார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.