வால்பாறை, : போகி பண்டிகை நாளில் பழைய துணிகளை தீயிட்டு எரிக்கக்கூடாது என்று,விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வால்பாறை நகராட்சி சார்பில், புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியை முதல்வர் சிவசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் பேசியதாவது:
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வால்பாறை நகராட்சியில் வீடு மற்றும் கடைகள் தோறும் குப்பை நேரடியாக சேகரிக்கப்படுகிறது. வால்பாறை நகராட்சியை சுகாதாரமான நகராட்சியாக மாற்ற, திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டுமானால், சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும்.
போகிப்பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய துணிகளை தீ வைத்து எரிக்கக்கூடாது. அதனால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள தேவையற்ற பழைய துணிகள், டயர், பேப்பர் மற்றும் இதர உபயோகமற்ற பொருட்களை, ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள கழிவுகள் சேகரிப்பு மையத்தில், போகிபண்டிகை நாளில் (13ம் தேதி) காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை வழங்கலாம்.
புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும். இவ்வாறு, பேசினார்.
நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீரபாகு, மேற்பார்வையாளர் நித்யானந்தம், கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் ரூபா, சங்கர் மற்றும் துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.