பழுதான சாலைகளை காரணம் காட்டி அரசு பஸ் சேவையை நிறுத்தக்கூடாது

0
83

ஆலோசனை கூட்டம்

வால்பாறையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், நடைபாதையில் கடை நடத்துபவர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், வியாபாரிகள் தங்களது கடை முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது, சுற்றுலா வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

சாலையை சீரமைக்க முடிவு

மேலும் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும், தரமான பஸ்களை இயக்க வேண்டும், பழுதாகி நடுவழியில் பஸ் நிற்கும்போது மாற்று பஸ் இயக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்தந்த துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு வெள்ளமலை எஸ்டேட் சாலை, சேக்கல்முடி எஸ்டேட் சாலை, மானாம்பள்ளி எஸ்டேட் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் அரசு பஸ்களை இயக்க தகுதியற்ற நிலையில் இருந்து வருகிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் பழுதடைந்து உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலை, மின் வாரியத்திற்கு சொந்தமான சாலை, எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

நிறுத்தக்கூடாது

இதற்கிடையில் சாலைகள் பழுதடைந்து இருப்பதை காரணம் காட்டி அரசு பஸ்களை இயக்குவதை நிறுத்தக்கூடாது என்று நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் தண்டபாணி, சின்னராஜ், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், எஸ்டேட் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் போதைப்பொருள் விற்பனையை தடுக்க உதவ முன் வருவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் நன்றி கூறினார்.