பழுதடைந்த சாலையால் பள்ளி மாணவர்கள் அவதி

0
86

கிணத்துக்கடவு அருகே பழுதடைந்த சாலையால் பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாணவர்கள் அவதி

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு செல்ல சொலவம்பாளையம் வழியாக செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் சொலவம்பாளையம் பள்ளிக்கு நடந்து சென்று வருகிறார்கள்.

அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது ஒரு கிலோ மீட்டர் தூரம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக குமாரபாளையம் மற்றும் தோட்டத்து சாலைகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் குமாரபாளையம் பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

கரடு, முரடான சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சொலவம்பாளையத்தில் இருந்து குமாரபாளையம் செல்ல ஒரு கிலோமீட்டர் தூரம் சாலை உள்ளது. தற்போது இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.

குமாரபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் சாலையில் சிரமத்துடன் நடந்து சென்று வருவதாக ஏற்கனவே ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் பழுதடைந்த சாலைகள் குறித்து கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை சீரமைப்பு பணிகள் நடைபெறாததால், அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.