‘தினமலர்’ பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியில், பள்ளிகள் குறித்த தகவல்களுடன் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.
தினமலர்’ நாளிதழ், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில் பள்ளி வழிகாட்டி, 2025 நிகழ்ச்சி நேற்று கோவை அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில் துவங்கியது.
இதில், 25 அரங்குகளில் பல்வேறு பள்ளிகள் தங்களது பள்ளிகளில் இடம்பெற்றுள்ள வசதிகள் எடுத்துரைக்கப்படுகின்றன. இதுதவிர, பல்வேறு பள்ளிகள் சார்பில், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, குழந்தைகளின் சிந்தனை திறனை துாண்டும் வகையில், பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அதேபோல், ராக்கெட் மாதிரிகள் குறித்தும் அறிந்து கொண்டனர். குழந்தைகளுக்கு எழுத்து வடிவங்களை சரியாக பொருத்தும் விளையாட்டுகளும் இருந்தன. இதுதவிர, குழந்தைகளுக்கான பலுான் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் இருந்தன
குட்டீஸ் கற்பனை திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, ஓவியம் வரைதல், பெயிண்டிங் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருந்தன.
ஈரோடு மாவட்டம் அர்சலுார் அகஸ்தியா அகாடமி பள்ளி சார்பில் மாணவர்கள் உற்பத்தி செய்த பனைஓலையால் ஆன, சாவிக்கொத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பள்ளி ஒருங்கிணைப்பாளர் லோகபிரியா கூறுகையில், ”தொழில்நுட்பம் சார்ந்த கல்வியும் வழங்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு என்ன கல்வி கொடுத்தால் அதை எளிதில் அறிந்து கொள்வர் என்ற அடிப்படையில், கல்வி போதிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, விவசாய கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மாணவர்களுக்கு அது சார்ந்த கல்வியை வழங்குகிறது. எங்கள் பண்ணையில் மேற்கொள்ளப்படும் விவசாயம், கால்நடை வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியை ஆர்வமுடன் கற்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார்.